இலங்கைக்கு யென் கடன் திட்டத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

by Bella Dalima 04-05-2024 | 7:02 PM

Colombo (News 1st) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) முற்பகல் இலங்கை வந்தடைந்த ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yōko Kamikawa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிற்பகல் சந்தித்துள்ளார்.

இதன்போது, கடன் மறுசீரமைப்பிற்கான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் அபிவிருத்திக்காக யென் கடன் திட்டத்தின் (Yen loans) ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனை ஜப்பான் வரவேற்றுள்ளது. 

கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான உடன்படிக்கை எட்டப்பட்டதன் பின்னர் இலங்கையினால் இரு தரப்பு உடன்படிக்கைகளுக்கு செல்ல முடியும் என ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார். 

இலங்கையும் ஜப்பானும் தீவுகள் என்பதை சுட்டிக்காட்டிய அவர்,  சுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திர வலயத்தினை உருவாக்குவதற்கு ஜப்பான் இலங்கையுடன் இணைந்து பக்கபலமாக செயற்படும் எனவும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா தெரிவித்துள்ளார்.