மூடி மறைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மூடி மறைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

by Staff Writer 04-05-2024 | 7:53 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை மூடி மறைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆரம்பித்த செயற்பாடுகள், தற்போதைய அரசாங்கத்தில் அதனை விட உயர் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஸ அண்மையில் வௌியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைத்த மறுநாள், தாம் பேராயருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவில்லை என   முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஸ தெரிவித்த கருத்தானது முற்றிலும் பொய்யானதென கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஸ தமக்கு அவ்வாறான தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியதாக மீண்டும் உறுதிப்படுத்திய பேராயர், தனக்கு நெருங்கிய அமைப்புகளுக்கு எதிரான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாதென  குறித்த தொலைபேசி அழைப்பில்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எதிராக, ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவரது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் பேராயர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை தெரிவு செய்து தப்பித்துக்கொள்வதற்காக, கோட்டாபய ராஜபக்ஸ அமைச்சரவை உப குழுவை நியமித்தமையானது, அவற்றை நடைமுறைப்படுத்துவதை விடவும்,  நடைமுறைப்படுத்தாமல் இருப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவரை மாற்றி, தனக்கு நெருக்கமானவரை அந்த பொறுப்பில்  நியமித்ததன் காரணமாக குறித்த விசாரணைகள் வலுவிழந்தமை தொடர்பில் தாம் புதிதாகக் கூற வேண்டியது இல்லை எனவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை மற்றும் வழக்குகளை முன்னெடுக்காது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மூடி மறைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆரம்பித்த செயற்பாடுகள், தற்போதைய அரசாங்கத்திலும் அதனைவிட உயர் மட்டத்தில் முன்கொண்டு செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான, வெளிப்படையான மற்றும் உண்மையுள்ள விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை அது தொடர்பில் தாம் அவதானத்துடன் செயற்படுவதாகவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.