.webp)
-561751.jpg)
COLOMBO (News 1st) வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக சில மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்கள் முன்வராமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
சில மருந்துகள் குறைந்தளவிலேயே தேவைப்படுவதால் அவற்றை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் தலையீட்டினால் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக குறித்த மருந்துளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவற்றை தொடர்ச்சியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் கொள்வனவு செய்யப்படும் குறித்த மருந்துகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் மருந்துகள் எனவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.
