நாமலுக்கு எதிரான வழக்கு நிறைவு

நாமலுக்கு எதிரான நிதித்தூய்தாக்கல் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு

by Staff Writer 14-10-2026 | 8:06 PM

Colombo (News 1st) எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தது.

மேல்நிலை நீதிமன்றமொன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி மூன்றாவது சந்தேகநபரான ஷமிந்த்ர ராஜபக்ஸ ஆகியோரைக் கைதுசெய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர். 

இந்த வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸவுக்கு கடந்த தவணையின் போது பிணை வழங்கப்பட்டது. 

எனினும், இலஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான மற்றொரு வழக்கில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் இன்று சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.