.webp)
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஸ இன்று(12) பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, தாம் கைது செய்யப்பட்டால் முன்பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்த முன்பிணை மனுவை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2010ஆம் ஆண்டு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறி முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய, அரச வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் ரூபா பணம் 'சிரிலிய சவிய' கணக்கில் வைப்பிலிடப்பட்டு அந்த பணத்தை குற்றவியல் ரீதியாக பயன்படுத்தியமை தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்டால், முன்பிணையில் விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கடந்த 5ஆம் திகதி முன்பிணை மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்தகை்கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பிரியசேன, இந்த மனுவைப் பரிசீலிப்பதற்கு குறித்த நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நீதிமன்றத்தில் முன்பிணை கோருவதற்கு மனுதாரரால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கோள் ஆரம்பம்
சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பிரியசேன
இந்த பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் நடந்த அதிகார எல்லை கோட்டை நீதவான் அதிகார எல்லைக்குட்பட்டது. எனவே இந்த பிணை மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்ஷிரந்தி ராஜபக்ஸ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா இந்த வாதத்தை நிராகரித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா
ஆரம்பத்தில் இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மனுதாரர் கைது செய்யப்பட மாட்டார் எனவும் கூறினார். அவ்வாறு இருக்கும் நிலையில் இந்த பிணைமனுவைப் பரிசீலிப்பதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என எப்படி கூற முடியும்? முறைப்பாட்டாளர் தரப்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாக மாற முடியாது. இவர் ஷிரந்தி ராஜபக்ஸ என்பதே துரதிர்ஷ்டவசமாக இங்குள்ள பிரச்சினை. ஷிரந்தி ராஜபக்ஸவை தூக்கிலிட வேண்டுமா? அதுவே நடக்க வேண்டுமா? இது அனுரவின் மனைவியாக இருந்திருந்தால் பொலிஸார் எதனையும் செய்திருக்க மாட்டார்கள்நிதிக்குற்ற விசாரணை பிரிவின் சார்பில் ஆஜரான விசாரணை அதிகாரி, குறித்த குற்றச்செயல் வௌிக்கொணரப்பட்டதை அடுத்து, அந்த குற்றம் இடம்பெற்ற நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரி
நீதவான் அவர்களே, ஜனாதிபதி சட்டத்தரணி இச்சம்பவம் தொடர்பில் குழப்பமடைந்துள்ளார். ஏனெனில் இந்த சம்பவத்திற்குரிய கணக்கை முடக்குவது தொடர்பான உத்தரவு இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பான ஆரம்ப முறைப்பாடு கிடைத்த பின்னர், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைவாகவே அந்த கணக்கு முடக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்டத்தில் இந்த நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் திலீப பீரிஸ் ஆஜராகி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறினார். ஆனால் இந்த சம்பவத்திற்குரிய குற்றம் வௌிக்கொணரப்பட்ட பின்னர், அந்த குற்றம் நடந்த நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்டு விசாரணை அதிகாரிகள் விடயங்களை சமர்ப்பித்தனர்.
அதன்பின்னர் நீதவான், விசாரணை தொடர்பில் மேலதிக அறிக்கை ஏதேனும் சமர்ப்பிக்கப்படுகிறதா என முறைப்பாட்டாளர் தரப்பிடம் வினவினார்.
அதற்கு விசாரணை அதிகாரி "இல்லை" என பதிலளித்தார்.
விடயங்களை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை தள்ளுபடி செய்ததுடன், உரிய நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை தாக்கல் செய்யுமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தினார்.
