சிறைச்சாலைச் சட்டத் திருத்தக் குழு அறிக்கை

சிறைச்சாலைச் சட்டத் திருத்தக் குழுவின் அறிக்கை 2 வாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 09-10-2026 | 7:06 AM

Colombo (News 1st)  சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான கட்டளைகளை புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, எதிர்வரும் 2 வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், குறித்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் தேரர்கள் தடுத்து வைக்கப்படுதல் மற்றும் அவர்களை வௌியே அழைத்து செல்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் தற்போதைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய நிலையான கட்டளைகள் மற்றும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கபபட்டுள்ளது. 
3 பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும இடையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற விசேட சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான கட்டளைகளை காலத்திற்கேற்ப மீளாய்வு செய்து, தற்போதைய மத, கலாசார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறை தேவைகளுக்கமைய புதுப்பிக்கும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை கட்டமைப்பின் வினைதிறன், முகாமைத்துவம், பாதுகாப்பு, கலாசார விழுமியங்கள் மற்றும் சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்களை அடையாளங் கண்டு பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பு இந்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.