''இலங்கை எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டாம்''

கச்சதீவில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டாம் - இந்திய மீனவர்களுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 07-10-2026 | 12:22 PM

Colombo (News 1st) கச்சதீவில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் பிரவேசிக்கக்கூடாது என இந்திய உச்ச நீதிமன்றம் அந்நாட்டு மீனவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கச்சதீவை மீட்கக் கோரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழக மீனவர்கள் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று(06) சஞ்சய்குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவ் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கை மீனவர்கள் தமது கடலையும் நதிகளையும் சிறப்பாக பராமரிப்பதாகவும் தூய்மையாக உள்ளதால் இலங்கை கடற்பகுதியில் மீன்வளம் அதிகரிப்பதாகவும் நீதியரசர்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய கடல் பகுதி அசுத்தமடைந்துள்ளதால் மீன்வளம் அழிந்து விட்டதாகவும் இதனால் இலங்கை எல்லைக்குள் தமிழக மீனவர்கள் செல்வதாகவும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இங்கு தமது தரப்பு வாதத்தை முன்வைத்த இந்திய மத்திய அரசு, கச்சதீவு ஒப்பந்தம் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமில்லை என குறிப்பிட்டுள்ளது.

கச்சதீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து மீண்டும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

எனினும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச முயன்றதாகவும் ஆனால் பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இலங்கையுடன் சிறப்பாக உள்ள உறவை கச்சதீவு ஒப்பந்தம் குறித்து பேசி, அதனை முறித்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் மத்திய அரசு கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், மீன்வளத்தை தேடி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் சென்றால் கைது செய்யப்படுவார்கள் எனவும் கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமெனின், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள், இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.