.webp)
Colombo (News 1st) 120 நாட்களுக்கும் மேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சலே இன்று(06) மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சுரேஷ் சலேவை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியும் என வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்திற்கு இன்று பிற்பகல் அறிவித்திருந்தார்.
சந்தேகநபரான சுரேஷ் சலேவை வைத்தியசாலையிலிருந்து விடுவிப்பதா, இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவு செப்டம்பர் 28ஆம் திகதி எடுக்கப்படும் என இந்த வழக்கு இதற்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
அதற்கமைய, செப்டம்பர் 28ஆம் திகதி சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் வகையில் வைத்திய அறிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த வைத்திய அறிக்கை தொடர்பில் விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட 10 வைத்தியர்களுக்கு நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தார்.
குறித்த அழைப்பாணை உத்தரவிற்கு அமைய, தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமாரவுடன்
இருதய நோய் வைத்திய நிபுணர் காமினி கலப்பத்தி, வைத்திய நிபுணர் என்.எம்.பெரேரா, வைத்திய நிபுணர் யமுனா சேனாதீர,
ஊட்டச்சத்து வைத்திய நிபுணர் நலிந்த ஹேரத், மனநல வைத்திய நிபுணர் அனுப்ரபா விக்ரமசிங்க, இருதய மின் உடலியக்கவியல் வைத்திய நிபுணர் சுசித் அமரசிங்க, வைத்திய நிபுணர் வருணி சமரநாயக்க, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் மஹேன் கொத்தலாவல, பல் வைத்திய நிபுணர் அசங்க குணதிலக்க ஆகிய 09 வைத்தியர்களும் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
தோல்நோய் வைத்திய நிபுணர் ஜானக்க அக்கரவிட்ட வெளிநாடு சென்றிருந்த காரணத்தினால் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
குறித்த வைத்தியர்கள், அரசாங்க அதிகாரிகளாக இருப்பதால் அவர்கள் சார்பில் சட்ட மாஅதிபர் முன்னிலையாவதாக சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
திலீப பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
நாங்கள் நேற்று இந்த வைத்தியர்கள் குழுவை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அழைத்திருந்தோம். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். இந்த வைத்திய குழு 2026/09/28 அன்று மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலேவின் சுகாதார நிலை தொடர்பான இறுதி வைத்திய அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பத் இந்திக குமார ஊடாக அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 10 வைத்தியர்களும் கையொப்பமிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மூன்றாவது சந்தேகநபரின் சுகாதார நிலை தொடர்பான விடயங்கள் 06 அம்சங்களின் கீழ் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உரிய நேரத்தில் வழங்குதல், பொருத்தமான சூழலில் அவரை வைத்திருத்தல், அவரை வைத்திய கண்காணிப்பிற்கு உட்படுத்துதல், அவரை வைத்திய சிகிச்சை நிலையங்களுக்கு முறையாக அனுப்புதல், ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய சிகிச்சைக்கு அனுப்புதல், இதயத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் செயற்பாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பாக இருதய சிகிச்சை பிரிவிற்கு அனுப்புதல் உள்ளிட்ட 06 விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது சந்தேகநபர் தற்போது தேசிய வைத்தியசாலையின் 42ஆம் இலக்க விடுதியில் உள்ளார். தற்போது வைத்தியர்கள் அவரை தேசிய வைத்தியசாலையிலிருந்து விடுவிப்பதற்கு தகுதியான நிலையில் இருப்பதாகப் பரிந்துரைத்துள்ளனர். இதற்கமைய அவரை இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன்போது விசாரணை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காமை தொடர்பாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
திலீப பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
மூன்றாவது சந்தேகநபருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை வெளிப்புற காரணிகளால் ஏற்பட்டதல்ல. அவரது உடலின் தன்னியக்க செயற்பாட்டின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அவர் மேற்கொண்ட உண்ணாவிரம் காரணமாகவே அந்த நிலை தீவிரமடைந்தது. எனினும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்ட நபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அதில் 46 ஆவணங்கள், 9,700 பக்கங்கள் மற்றும் 247 பக்கங்களைக் கொண்ட சத்தியப்பிரமாணப் பத்திரம் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களை செய்வதற்கு அவருக்கு நினைவிருக்கிறது. ஆனால் இதுவரை அவருடைய தொலைபேசியின் கடவுச்சொல் மாத்திரம் அவருக்கு நினைவில் இல்லை. இது தொடர்பாக அவரது சட்டத்தரணியின் நிலைப்பாடு என்னவென்றால், சந்தேகநபர் 03 நாட்களுக்கு ஒரு தடவை கடவுச்சொல்லை மாற்றுகிறார் என்பதாகும். அவ்வாறாயின், அவர் வேறு எந்த வேலையும் செய்யவில்லை. அதனையே செய்துகொண்டிருந்திருக்கிறார். இவர் இலங்கை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி. தொடர்ந்து இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலேயே பணியாற்றியுள்ளார். எனவே, அவருக்கு இராணுவ வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் வாய்ப்பு உள்ளது. அங்கு அனைத்தும் அவருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் இவர் காதுகளை சுத்தம் செய்யவில்லை. பற்களையும் சுத்தம் செய்யவில்லை.இவ்வாறான அருவருப்பான விடயங்களைப் பேச வேண்டாம் எனவும் கண்ணியமான முறையில் பேசுமாறும் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் கருத்து வௌியிட்டார்.
மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
நீதிபதி அவர்களே, இங்கு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக மறந்துவிட்டார்கள். அவர்கள் தொடர்பில் யார் கேட்கிறார்கள்? அவர்களின் சிகிச்சை தொடர்பாக யார் கேட்கிறார்கள்? ஆனால் இவரைப் பற்றி அனைவரும் கவலைப்படுகிறார்கள். இவரது நாடகங்களுக்கு நாங்கள் மீண்டும் ஏமாறப் போவதில்லை.அவர் நோய்வாய்ப்பட்டவர் அல்ல. அவரை நோய்வாய்ப்படச் செய்துள்ளனர். இதற்காக மூன்றாவது சந்தேகநபரின் உறவினரான வைத்தியரொருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து தலையிட்டுள்ளார். இந்த நாடகங்களை நாங்கள் வெளிப்படுத்த தயாராக இருந்தோம். ஆனால் தற்போது அவரை வைத்தியசாலையிலிருந்து அழைத்துச்செல்ல முடியும் என வைத்தியர்கள் நேற்று தெரிவித்துள்ளதால், அது தொடர்பாக எதுவும் செய்யவில்லை. இந்த வைத்தியர்களுக்காக முன்னிலையாக சட்ட மாஅதிபர் விரும்பியிருக்கவில்லை. சட்டத்தரணிகளை அழைத்து வருமாறு கூறப்பட்டிருந்தது. இந்த சந்தேகநபரை அனுப்ப முடியும் என ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாகவே, இன்று சட்ட மாஅதிபர் சார்பில் நான் முன்னிலையாகியுள்ளேன். இந்த சந்தேகநபர் இந்த விசாரணையை 119 நாட்களாக முற்றிலும் தாமதப்படுத்தி வந்துள்ளார்.
இதன்போது, சம்பந்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொல்லைப் பெறுவதற்கு விசேட நுட்பங்களைப் பயன்படுத்த முடியாதா என நீதவான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், உள்நாட்டு மட்டத்தில் அதனைச் செய்ய முடியாவிட்டால், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
தனது சேவைபெறுநரை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு, அவர் நாடகம் ஆடுவதாக குற்றஞ்சாட்டப்படுவதாக சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ
முன்னர் வழங்கப்பட்ட வைத்திய அறிக்கைகளையும் இன்று அல்லது இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வைத்திய அறிக்கைகளையும் நாங்கள் கோரியிருந்தோம். இன்று வரை அவை எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது குற்றப் புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலாகும். அது தொடர்பாக எங்களுக்கு குறைந்தபட்சம் சட்ட மாஅதிபரின் அறிவித்தல் கூட வழங்கப்படவில்லை. இது எங்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்தால், எதிர்த்தரப்பினருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும். முறைப்பாட்டு தரப்பிற்கு சட்டமும் எதிர்த்தரப்பிற்கு மற்றுமோர் சட்டமும் இருக்க முடியாது. எங்கள் சேவைபெறுநரின் சுகாதார நிலை தொடர்பாக எங்களிடம் குறைந்தபட்சம் ஒரு வைத்திய அறிக்கை கூட இல்லை. எங்களிடம் இல்லாத வைத்திய அறிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு எவ்வாறு பெற்றுக்கொண்டது? யாரும் நீதிமன்றத்தில் வைத்திய அறிக்கைகளைக் கோராத நிலையில் இது எவ்வாறு நடந்தது? கனம் நீதிபதி அவர்களே முறைப்பாட்டு தரப்பு எனது சேவைபெறுநர் பற்களைத் துலக்கவில்லை போன்ற விடயங்களைக் கூறியுள்ளது. அது இங்கு தொடர்புடைய விடயமா? சட்ட மாஅதிபர் அவ்வாறு எப்படி கூற முடியும்? சட்ட மாஅதிபர் பார்த்துக்கொண்டிருந்தாரா? ஏன்? எனது சேவைபெறுநரை அவமதிக்கிறார்கள். இங்கு எனது சேவைபெறுநரை அவமதிப்பதன் மூலம் நாடகம் ஆடப்படுவது இதுதான். கடவுச்சொல் தொடர்பாகக் கூறப்பட்டது. இதுவரை அவரிடம் கடவுச்சொல் தொடர்பாகக் கேட்டு எவ்வித வாக்குமூலமும் பெறப்படவில்லை. அவர் வைத்தியசாலையில் இருந்தபோது அவரிடம் கேட்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில், எங்களுக்கு நினைவிருக்கின்ற வகையில், அவர் மூன்று கடவுச்சொற்களை எழுதிக் கொடுத்தார். இந்த விசாரணையில் சதிகாரர்கள் உண்மையில் முறைப்பாட்டு தரப்பில்தான் இருக்கிறார்கள். கடந்த முறை இந்த வைத்தியர்களை சதிகாரர்கள் என இந்த நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே முறைப்பாட்டு தரப்பு கூறியது. ஆனால் இன்று அவர்களுக்காக முன்னிலையாக வந்திருக்கிறது.வைத்திய அறிக்கைகள் தேவை என சந்தேகநபர் தரப்பினால் நீதிமன்றத்தில் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என நீதவான் தெரிவித்தார்.
சந்தேகநபர் தரப்பிடம் இல்லாத வைத்திய அறிக்கைகள் பாதிக்கப்பட்ட தரப்பிடம் இருப்பதாகவும் அது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவ்வாறு இருப்பது நடக்கக்கூடாத விடயம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேற்கோள் ஆரம்பம்
திலீப பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
நீதிபதி அவர்களே நான் அந்த பத்து வைத்தியர்களையும் சதிகாரர்கள் என கூறவில்லை. இங்கு ஒரு வைத்திய சதி இருப்பதாகவே நான் கூறினேன். அதனை நான் அன்றும் கூறுகிறேன், இன்றும் கூறுகிறேன். இவர் வைத்தியசாலையில் இருந்து சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் இருந்தார். வெப்பமானியை வாயில் வைக்கிறார்கள். காய்ச்சலைப் பரிசோதிக்கிறார்கள். எப்படியிருந்தாலும் வைத்தியசாலையில் இருக்கும்போது ஒவ்வொருவரும் பல்வேறு விடயங்களை செய்வார்கள் அல்லவா? பற்களில் படிந்திருந்த கறை போன்றவற்றையும் அகற்றியுள்ளனர். அவர் பற்களை முறையாகத் துலக்கி சுத்தமாக வைத்திருக்காததால் அவை ஏற்பட்டுள்ளன. இப்போது பற்களையும் சுத்தம் செய்து, சத்திரசிகிச்சையும் செய்துள்ளனர். எப்படியிருந்தாலும் அது இதயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த சந்தேகநபரின் இதயத்தில் பொருத்தப்பட்ட கருவியும் அரசாங்கத்தின் அனுசரணையிலேயே பொருத்தப்பட்டது.
விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான், வழக்கை மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு திகதி நிர்ணயித்தார்.
