ஞானசார தேரர் விளக்கமறியலில்..

ஞானசார தேரருக்கு ஏலவே விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை மீண்டும் அமுல்

by Staff Writer 05-10-2026 | 6:59 PM

Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை காலத்தை இன்று(05) முதல் நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம முன்னாள் நீதவானும் கொழும்பு முன்னாள் பிரதம நீதவானுமான ரங்க திசாநாயக்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஜனவரி மாதம் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் அனுமதியின்றி கருத்து வௌியிட்டமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஊடாக நீதிமன்றத்தையும் அரச சட்டத்தரணிகளையும் அவமதித்ததாக அந்த குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

04 குற்றச்சாட்டுகளில் 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

பின்னர் அந்த தண்டனையிலிருந்து அவரை விடுவித்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என குறிப்பிட்டு, குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், மன்னிப்பு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய சட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை வலுவற்றதாக்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் குறித்த தண்டனை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் சட்ட மாஅதிபர் விடயங்களை தெளிவுபடுத்தி நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த பிரதிவாதியான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை கண்டதும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டு திறந்த பிடியாணையை கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

குறித்த நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த சனிக்கிழமை தீனியாவல பகுதியிலுள்ள ஆரண்ய சேனாசனமொன்றில் மறைந்திருந்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தேரரின் உடல்நிலை சரியில்லாததால் ஓய்வெடுப்பதற்காக ஆரண்ய சேனாசனத்திற்கு சென்றிருந்ததாக தெரிவித்தார்.

அங்கு தொலைபேசி சமிக்ஞை இல்லாததால் சட்டத்தரணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நீதிமன்றத்தை தவிர்க்கும் நோக்கம் எதுவும் ஞானசார தேரருக்கு இருக்கவில்லை எனவும் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.

தமது சேவைபெறுநர் கருத்து தெரிவிக்க விரும்புவதாக சட்டத்தரணி அறிவித்த போதிலும், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இதற்கமைய, ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனையை இன்று(05) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.