.webp)
-559700.jpg)
Colombo (News 1st) நிலவும் வறட்சியான வானிலையினால் 7 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த மக்களே வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியினால் இதுவரையில் 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் சுமார் 60 குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிலவும் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள 75,000-இற்கும் அதிகமான மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 34.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 21.7 வீதமாக பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 25.6 வீதம் வரையிலும், திருகோணமலை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 26.8 வீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முருதவெல, மொரவெவ, கவுடுல்ல, எத்திமலை, வீரவில, வெஹெரகல, உன்னிச்சை, மொரான, நாகதீபம் மற்றும் ரொட்டிகுளம் ஆகிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 20 வீதத்திற்கும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது.
நிலவும் வறட்சியான வானிலையினால் குடிநீர் விநியோகத்திற்காக நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
