சாகரவின் கருத்து குறித்து விசாரணை -அமைச்சர் நலிந்த

சாகரவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை - அமைச்சர் நலிந்த

by Staff Writer 04-08-2026 | 6:55 PM

Colombo (News 1st) பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் கொலை செய்யப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று(03) ஊடக சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பில் கட்டாயமாக விசாரணை செய்யப்பட வேண்டுமென அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இது குறித்து தௌிவுபடுத்தினார்.

பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் கொலை செய்யப்படலாம் என சாகர காரியவசம் தெரிவித்த கருத்தானது மிகவும் பாரதூரமானதென அவர் தெரிவித்தார்.

குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை தற்போதைய பொலிஸ் மாஅதிபர் மிக விரைவாக முன்னெடுத்துள்ளதாகவும் போதைபொருள் ஒழிப்பு, பாதாள குழு செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பன தற்போது மிக கடுமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

குற்றச்செயல்கள், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக பொலிஸ் நிர்வாகம் செயற்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சியொன்றின் பொதுச் செயலாளர் பொலிஸ் மாஅதிபர் அடித்து கொலை செய்யப்படலாமென தெரிவித்துள்ளமை பாரதூரமானதென அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பின் போது மிகவும் திட்டமிட்டு, தௌிவாக, சுயநினைவுடன் அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளதை அனைவரும் கண்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றபுலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்