சிறு வௌ்ள அபாயம்

அத்தனகலு ஓயா, களனி, களு கங்கைகளை அண்மித்து சிறு வௌ்ள அபாயம்

by Staff Writer 22-05-2026 | 6:46 PM

Colombo (News 1st) பலத்த மழையினால் அத்தனகலு ஓயா, களனி, களு கங்கைகளை அண்மித்த பகுதிகளில் சிறு வெள்ள அபாயம் ஏற்படுவது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை. ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ருவான்வெல்ல, சீதாவக்க, தொம்பே, பியகம, தெஹியோவிட்ட, எஹெலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹூப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகளில் களனி கங்கையின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஏற்படக்கூடிய சிறுவௌ்ளம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, அயகம மற்றும் கிரிஎல்ல பிரதேச செயலக பிரிவுகளில் களு கங்கையின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்குள் சிறுவௌ்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் அப்பகுதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.