கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கம்பஹா ஒஸ்மன் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கம்பஹா ஒஸ்மன் கைது

by Staff Writer 14-05-2026 | 12:55 PM

Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய 'கம்பஹா ஒஸ்மன்' என்றழைக்கப்படும் ஒஸ்மன் குணசேகர கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி வழக்கிற்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போது 'கணேமுல்ல சஞ்சீவ' எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி போன்று வந்த நபராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச் செயலுக்காக வெளிநாடுகளில் உள்ள திட்டமிட்ட குற்றவாளிகளுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியமை, குற்றத்தை புரிவதற்கு தேவையான துப்பாக்கியை வழங்கி மனிதப் படுகொலைக்கு உதவியமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் வகை துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மகஸின்கள் ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா ஒஸ்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்களுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.