.webp)

Colombo (News 1st) 1999 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று(31) நீக்கியுள்ளது.
குறித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த சீராய்வு மனுவை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன இந்த தீர்ப்பை அறிவித்தார்.
1999 டிசம்பர் 21ஆம் திகதி நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்குக்கு எதிராக முன்னாள் அமைச்சரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அதனை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கி ரிட் உத்தரவை பிறப்பித்திருந்ததுடன் அதற்கு எதிராக சட்ட மாஅதிபர் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
