''இறக்குமதி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை''

இறக்குமதி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை - சுகாதார பிரதியமைச்சர்

by Staff Writer 30-03-2026 | 6:06 PM

COLOMBO (News 1st) - இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லையென சுகாதார பிரதியமைச்சர், டொக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.

யட்டிநுவரவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனை கூறினார். 

கடந்த காலங்களில் மேலதிக கையிருப்பை வைத்துக்கொள்ள முயற்சித்தமையால் நாட்டில் போதியளவு மருந்து  கையிருப்பு காணப்படுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

கிளினிக், வெளிநோயாளர் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகளுக்கு தேவையான மருந்துகள் போதியளவு கையிருப்பிலுள்ளதால் நோயாளர்களுக்கு 02 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனூடாக வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதுடன் வலுசக்தியை சேமிக்க முடியும் எனவும் பிரதியமைச்சர் கூறினார்.

வௌிநாட்டு நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த மருந்துகள் உரிய காலத்திற்குள் கிடைப்பது குறித்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் ஈரானில் இருந்து வரவேண்டிய மருந்துகள் கூட தற்போது கிடைத்து வருவதாகவும் சுகாதார பிரதியமைச்சர், டொக்டர் ஹங்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.