.webp)
Colombo (News 1st) Avant Garde Maritime Services நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட 02 மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.
Avant Garde Maritime Services நிறுவனத்தினால் நடத்திச்செல்லப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலைகளை கடற்படை வளாகங்களில் இருந்து அகற்றிக்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் வழங்கிய உத்தரவை வலுவற்றதாக்கும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை கடற்படை வளாகங்களில் நடத்திச்செல்லப்பட்ட தமது ஆயுதக் களஞ்சியசாலைகளை அகற்றிக்கொள்ளுமாறு கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய குறித்த ஆயுதக் களஞ்சியசாலைகளை நவம்பர் 28ஆம் திகதிக்கு முன்னதாக அகற்றிக்கொள்ளுமாறு குறித்த கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்ததாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பினரும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், 02 மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
