.webp)

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி இன்று(17) பிற்பகல் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 152 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிராக 02 வாக்குகள் அளிக்கப்பட்டன.
புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக்க மாதுகொட ஆகியோரே சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
பின்னர் குழுநிலை விவாதத்தின் போது 3ஆம் பிரிவில் திருத்தம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த திருத்தத்திற்கு எதிராக 152 வாக்குகளும் திருத்தத்திற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி குழுநிலை விவாதத்தின் போது 148 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சாமர சம்பத் தசநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சானக்க மாதுகொட ஆகியோரே திருத்தங்களை கோரியிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரச்சன்னமாகியிருக்கவில்லை.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படவுள்ளது.
தற்போது 550-இற்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களை சார்ந்திருப்போரும் ஓய்வூதியம் மூலம் பலனடைந்து வருகின்றமை வௌிக்கொணரப்பட்டுள்ளது.
