கம்மெத்த ‘Care & Dare’ செயற்றிட்டம் கொத்மலையில்

நிவாரணப்பணிக்கு அடுத்த கட்டமாக மீளக்கட்டியெழுப்புதலை ஆரம்பிக்கும் கம்மெத்த ‘Care & Dare’ செயற்றிட்டம் நாளை கொத்மலையில் ஆரம்பம்

by Rajalingam Thrisanno 09-01-2026 | 4:42 PM

Colombo (News 1st) ‘டித்வா’ (Ditwah) புயலினால் ஏற்பட்ட பாரிய அழிவுகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் உடனடி மனிதாபிமான உதவிகளையும் நீண்டகால சமூகப் புனரமைப்பையும் ஒன்றிணைத்து கம்மெத்த தனது புதிய அத்தியாயமான ‘Recover and Rebuild: Care & Dare’ திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவை தளமாகக்கொண்ட Minderoo Foundation வழங்கிய ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதி பங்களிப்பின் மூலம் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் அவசர நிவாரண சேவைகள் மட்டுமன்றி சமூகங்களை நிலையாக மீளக் கட்டியெழுப்புவது வரை கம்மெத்தவின் பேரிடர் கால சேவைகளை விரிவுபடுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கக

‘Care & Dare’ என்ற பெயர் பல்வேறு துறைகளை கருத்திற் கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  

இன்னமும் சொல்லொணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்களின் தேவைகளைத் தொடர்ச்சியாகக் கண்டறிந்து அரவணைத்தலும் ,  சவால்களை முறியடித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது இயல்பு வாழ்க்கையை மீண்டும் சுயமாகக் கட்டியெழுப்பத் தேவையான பலத்தை வழங்குதலும் இதன் நோக்கங்களாகும்.

இந்தத் திட்டம் எதிர்வரும் நாட்களில் பல பிரதேசங்களை உள்ளடக்கி 10 நிவாரண முகாம்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் முதலாவது முகாம் நாளை (10) டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு சமூக முகாமிலும் அவசர நிவாரணப் பணிகளுக்கு மேலதிகமாக பின்வரும் சேவைகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன:

அவசர உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல்

மருத்துவ மற்றும் பொது சுகாதார சேவைகள்

ஆவணங்கள் மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசர சட்ட உதவி

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகள்

வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான தொழில்முறை மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள்

இந்த மனிதாபிமானப் பணி சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் அவசர நிவாரண மையம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்தப்படுகிறது. அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தேசிய தொழில் பழகுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA), கொத்மலை பிரதேச செயலகம் மற்றும் V-Force தன்னார்வக் குழுக்களும் இதற்கு தொழில்முறை ரீதியான ஒத்துழைப்பை வழங்குகின்றன.

இது குறித்து கம்மெத்த தலைவர் ஷெவான் டேனியல் குறிப்பிடுகையில், ‘Care & Dare’ இன் நோக்கம் குறுகிய கால நிவாரணங்களுக்கு அப்பால் சென்று,  பேரிடருக்குப் பின்னர் சமூகங்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதாகும்" என்றார்.  

அவுஸ்திரேலியாவின் முன்னணி சமூக சேவை அமைப்பான Minderoo Foundation கம்மெத்தவுடன் கைகோர்த்திருப்பது கம்மெத்தவின் செயற்பாடுகள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன் டித்வா சூறாவளிக்கு பின்னரான சமூக வலுவூட்டல் செயன்முறைக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவத்திலிருந்து மீளக் கட்டியெழுப்பப்படும் கட்டத்தை நோக்கி நகரும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகளை மட்டும் வழங்காமல் அவர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாத்து திறமையுடனும் ஒத்துழைப்புடனும் மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்பத் தேவையான சக்தியை வழங்குவதே ‘Care & Dare’ செயற்றிட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும்.