.webp)

Colombo (News 1st) மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பின்னர் உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இம்முறை நத்தார் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் என ஜனாதிபதி விடுத்துள்ள நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனித குலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் போதனையான இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும் அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதில் கொண்டு இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தமது சக குடிமக்களுக்காக வௌிப்படுத்திய அன்பு பாராட்டுக்குரியது என பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியை உலகிற்கு மக்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
