.webp)
Colombo(News1st) 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று(6) நடைபெறுகின்றது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று(06) காலை ஆரம்பமானதுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04 மணியுடன் நிறைவடையவுள்ளன.
நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள், 257 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக 171,563,38 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் கடமைகளில் நாடளாவிய ரீதியில் 65,000 பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தி விசேட பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளுக்காக உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4,450 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
800 நடமாடும் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட தமது அமைப்பின் 3,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாக பெஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இம்முறை தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் 1,250 கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
ஜனநாயக மறுசீரமைப்பு தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் எனப்படும் ஐரெஸ் அமைப்பின் 200 கண்காணிப்பாளர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.