வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கான நீதிமன்றின் உத்தரவு

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய 22 பேர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு உத்தரவு

by Staff Writer 01-05-2025 | 3:53 PM

Colombo (News 1st) ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரத்தினூடாக குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நிலுப்லி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றவிசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.