.webp)
Colombo (News 1st) கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Gary Anandasangaree மற்றும் Juanita Nathan ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்ட மாஅதிபராகவும் பதவி வகிக்கும் இலங்கை தமிழரான Gary Anandasangaree இம்முறை பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
2024 டிசம்பர் மாதத்திலிருந்து கனேடிய பொருளாதார அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு பொறுப்பான அமைச்சராகவுள்ளதுடன் ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார்.
கனேடிய வரலாற்றில் அமைச்சரவை அமைச்சராகப் பதவியேற்ற முதலாவது இலங்கை தமிழர் என்ற பெருமைக்குரியவராக Gary Anandasangaree திகழ்கின்றார்.
ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அதிகபடியான வாக்குகளைப் பெற்று Gary Anandasangaree பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் நேற்று வௌியான தேர்தல் முடிவுகளுக்கமைய ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதியில் 35,343 வாக்குகளை பெற்று 63.9 வீத வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றுள்ளதாக கனேடிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, Pickering—Brooklin தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Juanita Nathan 35,548 வாக்குகளை பெற்று 54.1 வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெற்றுள்ளார்.
மார்க்காமில் நீண்ட காலமாக வசித்துவரும் Juanita Nathan சமூக செயற்பாட்டாளர் ஆவார்.
2022ஆம் ஆண்டில் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், பல முக்கிய பதவிகளை வகித்துள்ளதாக லிபரல் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Gary Anandasangaree மற்றும் Juanita Nathan ஆகியோரின் தேர்தல் வெற்றியுடன் கனேடிய பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்களின் இருப்பு இரண்டாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.