.webp)
Colombo (News 1st) நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை செய்துள்ளது.
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு நேற்று(01) கூடிய சந்தர்ப்பத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருப்பதோடு சந்தையில் குறிப்பிட்ட சிலவகை அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி போதியளவு அரிசியை கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் அதிக மழை பெய்ததால் இருதடவைகள் விளைச்சலுக்கு சேதமேற்பட்டு எதிர்பார்த்த அறுவடையில் கணிசமான அளவு குறைந்துள்ளதும் இங்கு குறிப்பிடப்பட்டது.
கால்நடை உணவுக்கு முறையற்ற விதத்தில் அரிசியைப் பயன்படுத்துவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு மற்றொரு முக்கிய காரணம் எனவும் கால்நடை உற்பத்தி தொழிலில் கால்நடை உணவுத்தேவைக்காக உடைத்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று உணவுகளை பயன்படுத்துவது குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
அதற்கமைய உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சின் பணிப்பாளர் தலைமையிலான குழுவை அமைப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது.