அத்தனகல்ல துப்பாக்கிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு

சஞ்சய சிறிவர்தனவின் காணியில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளும் தோட்டாக்களும் இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பு

by Staff Writer 12-03-2025 | 12:27 PM


Colombo (News 1st) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தனவுக்கு சொந்தமான அத்தனகல்ல பகுதியிலுள்ள காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய சுற்றிவளைப்பின் போது T-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசீன்கள், 130 தோட்டாக்கள், கைதுப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 06 தோட்டாக்கள்  கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த காணியில் பணியாற்றிய சில ஊழியர்களிடமும் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபருக்கு சொந்தமான அத்தனகல்ல பகுதியிலுள்ள 25 ஏக்கர் தென்னந்தோப்பிலிருந்து துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் 04 ரி-56 ரக துப்பாக்கிகளும் கைக்குண்டுகள் சிலவும் குறித்த காணியில் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றை தேடி தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மழை காரணமாக நேற்றிரவு தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.