மாவை சேனாதிராசா காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா காலமானார்

by Staff Writer 29-01-2025 | 11:05 PM

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா இன்றிரவு(29) காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 82ஆவது வயதில் அவர் காலமானார்.

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற மாவை சேனாதிராசாவின் பூதவுடல் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னார் உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே 82 ஆவது வயதில் நேற்று(29) காலமானார்.

அன்னாரின் பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

இறுதிக் கிரியையகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணிக்கு மாவிட்டபுரம் இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.

மாவை சேனாதிராசா 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்தார்.

அன்னார் 1962 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்தததுடன் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.

சேனாதிராசா 1989 ஆம் ஆண்டு முதன்முதலாக பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மறைவையடுத்து அவரின் வெற்றிடத்திற்கு  தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றுக்கு தெரிவானார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தகுதிபெற்றதுடன் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

2004,2010,2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பரில் மாவை சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

சிறந்த அரசியல் சாணக்கியமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட ஆளுமை மிக்கவரான மாவை சேனாதிராசாவின் இழப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஈடு செய்ய முடியாதது.