சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று(10)

by Staff Writer 10-12-2024 | 2:48 PM

Colombo (News 1st) சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று(10) அனுஷ்டிக்கப்படுகின்றது.

1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினம், அனைவருக்கும் சமத்துவம், சமத்துவமின்மையை குறைத்தல், மனித உரிமைகளை முன்னேற்றுதல் எனும் தொனிப்பொருளில் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75ஆவது மனித உரிமைகள் தினமாக இம்முறை மனித உரிமைகள் தினம் சிறப்பு பெறுகிறது.

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான சகலவிதமான உரிமைகளுடனும் வாழ்தலே அடிப்படை உரிமையாகும்.

ஒவ்வொரு மனிதனுக்குமான அனைத்து உரிமைகளையும் உறுதி செய்வதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சமாகும்.

கலாசாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர்வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாயத் தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்நாள் உணர்த்துகின்றது என்றால் அது மிகையாது.