போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட ஆலோசனை

வாகனப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட ஆலோசனைகள்

by Staff Writer 26-12-2024 | 4:04 PM

Colombo (News 1st) வாகனப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இரவு வேளைகளில் வாகனங்களை நிறுத்தும்போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபரால் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த வாகனப் போக்குவரத்து அதிகாரியின் உருவம் சாரதிகளுக்கு தெரியக்கூடிய வகையில் ஔியைப் பிரதிபலிக்கும் ஔிரும் மேலங்கி மற்றும் ஔிரும் கையுறை கையுறை ஆகியவற்றை அவர் அணிந்திருக்க வேண்டும்.

அத்துடன் வாகனங்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிற மின்விளக்குகளையே முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டுமென குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இரவுநேரக் கடமையில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் அவ்வாறு செயற்படுகிறார்களா என்பது தொடர்பில் தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகளால் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இரவு வேளைகளில் வாகனங்களை நிறுத்தும்போது பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான மின்விளக்குகளை பயன்படுத்துகின்றமையால் அவை சாரதிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றமை காரணமாக அவர்களுக்கு வாகனத்தை கையாளவும் கட்டுப்படுத்தவும் கடினமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக விபத்துகள் இடம்பெறும் வாய்ப்பு காணப்படுவதாகவும் ஔியைப் பிரதிபலிக்கும் மேலங்கியை அணியாமையால் அதிகாரிகள் விபத்திற்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.