Colombo (News 1st) அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக பாரிய அளவிலான அரிசி ஆலை ஒன்றுக்காக தலா 2 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களின் நாளாந்த அரிசி தொகை விநியோகம், விலை, அந்த விலையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அரிசி கிடைக்கின்றதா என்பன உள்ளிட்ட விடயங்களை இவர்கள் ஆராயவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் நேற்று(08) முதல் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில்லறை விலையுடனான நிர்ணய விலையில் நேற்று முதல் அரிசியை விநியோகிப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவர்கள் இந்த இணக்கப்பாட்டை அறிவித்திருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.