அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பம்

அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பம்

by Staff Writer 08-12-2024 | 7:23 PM

Colombo (News 1st) பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் இன்று(08) முதல் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று(08) முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பிரதான 8 அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனடிப்படையில், அரலிய, நியூரத்ன, நிபுன, லக் சஹல், மேனக, ஹிரு, ஜயவிக்ரம மற்றும் வீஹேன ஆகிய அரிசி ஆலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக  நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள இரேஷா, லயனல், WHG,நவோத்யா, சனுஜா ஆகிய 5 அரிசி ஆலைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகாரஅதிகார சபை தெரிவித்தது.

நெல் கொள்வனவு நாளாந்த உற்பத்தி மற்றும் அரிசி தொகை விநியோகம் உள்ளிட்டவை தொடர்பில் தரவுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலையில் 230 ரூபா சில்லறை விலையிலும் விற்பனை செய்வதற்கு  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நேற்று(07) நடைபெற்ற கலந்துரையாடலின் போது  அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலையிலும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியிருந்தார்.

வௌ்ளைப் பச்சையரிசியை 215 ரூபா மொத்த விலையிலும் 220 ரூபா சில்லறை விலையிலும் சம்பா அரிசியை 235 ரூபா மொத்த விலையிலும் 240 ரூபா சில்லறை விலையிலும் 
கீரி சம்பா அரிசியை 255 ரூபா மொத்த விலையிலும் 260 ரூபா சில்லறை விலையிலும் விற்பனை செய்யுமாறும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனிடையே, நாட்டின் சில இடங்களில் வௌ்ளை அரிசி, சிவப்பரிசி, நாட்டரிசி ஆகியவை 260 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்னும் 7 அல்லது 10 நாட்களில் ஜனாதிபதி அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளமையால் அரிசி விற்பனை செய்யாதுள்ளதாக சில வர்த்தகர்கள் கூறினர்.

எவ்வாறாயினும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அரிசி வழங்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.