அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு ஆதரவு

அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம் - டொனல்ட் லூ

by Staff Writer 07-12-2024 | 8:32 PM

Colombo (News 1st) நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை இன்று(07) சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் ஊழல் - ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக நிதி, தொழிநுட்ப ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியல், பொருளாதாரம், சமூக காரணிகள் தொடர்பான முன்னுரிமையை அறிந்து புதிய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

ஊழல், வீண்விரயத்தால் இலங்கையின் அரசியல் கலாசாரம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி ஊழலையும் வீண்விரயத்தையும் குறைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்தை நிர்வாக சேவைகளுக்குள்  அறிமுகப்படுத்தி தரமான அரச சேவையை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்ததாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.