பலத்த மழையுடனான வானிலையினால் 12,114 பேர் பாதிப்பு

பலத்த மழையுடனான வானிலையினால் 12,114 பேர் பாதிப்பு

by Staff Writer 09-11-2024 | 6:16 PM

Colombo (News 1st) 3 மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய பலத்த மழையுடனான வானிலையினால் 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் முதலாம் திகதியிலிருந்து இதுவரை அவர்கள் பலத்த மழை, காற்று மற்றும் வௌ்ளம் ஆகிய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய கடும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இன்று(09) முற்பகல் 8.30-உடன்  நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி சிலாபம் - மெல்லவ பிரதேசத்தில் பதிவானது.

இங்கு 221.6 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தும்மலசூரிய பகுதியில் 190.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானதுடன் பாலாவி பகுதியில் 150.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குளியாபிட்டிய, ஆயித்தியமலை, பளுகஸ்வெவ, எல்கடுவ, உல்ஹிட்டிய ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டு செக்கனுக்கு 13,000 கன அடி நீர் தெதுறு ஓயாவில் விடுவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தெதுறு ஓயாவின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையினால் பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.