Colombo (News 1st) இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 23ஆம் திகதி பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியதுடன், மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அறுகம்பை பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா கிழக்கு மாகாணத்திற்கு நேற்று முன்தினம்(10) விஜயம் செய்திருந்தார்.
இதன்போது தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமளித்ததாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பெறப்பட்ட முடிவுகளுக்கு அமைய அறுகம்பை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.