9 வருடங்களின் பின்பு மே.தீவுகளை வென்ற இலங்கை

9 வருடங்களின் பின்பு மே.தீவுகளை வென்ற இலங்கை

by Rajalingam Thrisanno 17-10-2024 | 11:08 PM

9 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளை சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகொண்ட பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 தொடர்களை வென்றுள்ளதுடன் ஒரு தொடர் 1-1 என சமநிலையில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இவ்வருட தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் 2ஆவது போட்டியில் இலங்கையும் வெற்றிபெற்றதால் 3ஆவது போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

தம்புளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் ரொவ்மன் பவல் 37 ஓட்டங்களையும் குடாகெஸ் மொட்டி 32 ஓட்டங்களையும் பிரென்டன் கிங் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

மஹீஸ் தீக்‌ஷன, வனிந்து அசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

163 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணிக்கு பெத்தும் நிஸ்ஸங்க - குசல் மென்டிஸ் ஜோடி 5.2 ஓவர்களில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

பெத்தும் நிஸ்ஸங்க 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்து இணைந்த குசல் மென்டிஸ் - குசல் ஜனித் பெரேரா ஜோடி வீழ்த்தப்படாத 2ஆம் விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தது.

குசல் மென்டிஸ் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 36 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 55 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

இலங்கை அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை குசல் மென்டிஸ் சுவீகரிக்கு தொடரின் சிறந்த வீரர் விருதை பெத்தும் நிஸ்ஸங்க தன்வசப்படுத்தினார்.

இந்த வெற்றிக்கு அமைவாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இலங்கை 9 வருடங்களின் பின்னர் தனது முதல் தொடர் வெற்றியை பதிவுசெய்தது.