Colombo (News 1st) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள கலாசார விழா திருகோணமலையில் இன்று (06) இனிதே ஆரம்பமானது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை வரை கலாசார விழா திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு வீரசாகச விளையாட்டு திருகோணமலையில் இன்று நடைபெற்றது.
காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சம்பூரில் நடைபெற்றது.
மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன்,தென்னிந்திய நடிகர் துரைராஜ் நந்தா, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழர்களின் அடையாளமாய்த் திகழும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் 250 காளைகள் பங்கேற்றன.
வீரம், விவேகம், தைரியத்தை அடியொற்றி 150 வீரர்கள் காளைகளை அடக்குவதற்காக பங்கேற்றிருந்தனர்.