130 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டவர் கைது

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 130 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டவர் கைது

by Staff Writer 15-06-2024 | 4:13 PM

Colombo (News 1st) ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இது தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகத் தொகை பணத்தை அவர் மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசடியுடன் தொடர்புடைய நிறுவனம்,  வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.