மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் சிரமம்

by Bella Dalima 15-06-2024 | 4:03 PM

Colombo (News 1st) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை முறைமைக்கு (Chemotherapy) பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின், சுமார் ஒரு இலட்சம் ரூபா செலவாகுமென அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்தார். 

ஜனாதிபதி நிதியம், நன்கொடைகள் மூலம் வழங்கப்படும் கீமோ சிகிச்சைக்கான மருந்துகள் போதுமானதாக இல்லையெனவும் அவர் கூறினார். 

இந்நிலையில், நீண்டகாலமாக இந்த மருந்திற்கு நிலவும் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சிடம் வினவியபோது, பாவிக்கப்பட்டு வந்த குறித்த மருந்து பாவனைக்கு உகந்ததல்லவென விசேட வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ விஜேசூரிய தெரிவித்தார்.

இதனால், அந்த மருந்தை வைத்தியசாலைக்கு விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், சில வைத்தியர்களினால் நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதால், இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.