சிரேஷ்ட கெமரா கலைஞர், ஊடகவியலாளர் கெனெத் வீரக்கொடி காலமானார்

by Bella Dalima 15-06-2024 | 6:03 PM

Colombo (News 1st) இரண்டு தசாப்த காலமாக இலத்திரனியல் துறையில் சிரேஷ்ட கெமரா கலைஞராக சேவையாற்றிய, ஊடகவியலாளர் கெனெத் வீரக்கொடி, 56 ஆவது வயதில் நேற்று (14) காலமானார்.

 1968 ஆம் ஆண்டு பிறந்த, கெனெத் வீரக்கொடி, கொழும்பு ரோயல் கல்லூரியில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தார்.

கெஸ்பாவ ஸ்ரீபதி தர்ம வித்தியாலயத்தின், சிறந்த மாணவராக விளங்கிய அன்னார், அதே பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தில், 1988 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட, நிஸ்கோ வீடியோ கற்கைநெறியை தொடர்ந்த முதலாவது ஆண்டு மாணவர்களுள் இவரும் ஒருவராவார்.

இந்த கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து, வீடியோ கெமரா கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

சுதந்திர கெமரா கலைஞராக, 1998 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட MTV தனியார் தொலைக்காட்சியுடன் கெனெத் வீரக்கொடி இணைந்துகொண்டார்.

பின்னர் இரண்டு வருட காலம் சுவர்ணவாஹினி அலைவரிசையிலும் கடமையாற்றியுள்ளார்.

கெனெத் வீரக்கொடி 2000 ஆம் ஆண்டில் சிரச தொலைகாட்சியின் நிரந்தர ஊழியராக சேவையில் இணைந்தார்.

சிரச தொலைக்காட்சியின் ஜனரஞ்சக நிகழ்ச்சிகள் பலவற்றில் கடமையாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டியை ஹெலிகொப்டரில் சென்று காட்சிப்படுத்தியமையை அதற்கு உதாரணமாக கூறலாம்.

சிரச சுப்பர் ஸ்டார் - முதலாவது சீசனில், சிரேஷ்ட கெமரா கலைஞராக செயற்பட்ட கெனெத் வீரக்கொடி, அந்நிகழ்ச்சியை மெருகூட்டினார்.

ஸ்டெய்ன் கலையகத்தின் சிரேஷ்ட கெமரா கலைஞராக நீண்ட காலம் அவர் பணியாற்றியுள்ளார்.

கெமரா கலைஞனாக மாத்திரமன்றி, ஊடகவியலாளராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார் கெனெத், பின்நாளில் நியூஸ்ஃபெஸ்ட்டுடன் கைகோர்த்துக்கொண்டார்.

தான் அறிந்து வைத்திருப்பதை பிறருக்கு கற்பிக்கும் ஆற்றலும் திறமையும் கொண்டிருந்த கெனெத், M.I.M நிறுவனத்தில் விரிவுரையாளராகவும் சேவையாற்றினார்.

இறுதியாக.... கம்மெத்தவின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட அன்னார், பொறுப்பு வாய்ந்த பல துறைகளை வழிநடத்தினார்.

கெனெத் வீரக்கொடியின் பூதவுடல், பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொரளையில் நாளை (16) நடைபெறவுள்ளன.

இரண்டு தசாப்தத்திற்கும் அதிகக் காலமாக, சிரச TV மற்றும் நியூஸ்ஃபெஸ்ட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட கெனெத் வீரக்கொடியின் ஆத்மா சாந்தியடையட்டும்...