ரஷ்ய படைகளுக்கு இலங்கையர்களை இணைத்துக்கொள்ளாதிருக்க இணக்கம்

by Staff Writer 11-06-2024 | 12:49 PM

Colombo (News 1st) ரஷ்யாவின் ஆயுதப் படைகளில் பணியாற்றுவதற்காக தொடர்ந்தும் இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதை இடைநிறுத்துவதற்கு அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சர்ஜி லெவ்ரோவ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இடம்பெறும் பிரிக்ஸ் அமைச்சர்களுக்கான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ரஷ்யாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுற்றுலா, உயர்கல்வி, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு வௌிவிவகார அமைச்சர்களும் இதன்போது இணங்கியுள்ளனர்.

இதன்போது ரஷ்யாவின் ஆயுதப் படைகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ஈடுபடுத்தும் மனிதக் கடத்தல் தொடர்பில் எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலுக்காக ரஷ்யாவிற்கு செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க ஆகியோர் அடங்குகின்றனர்.

ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ஈடுபடுத்தும் மனிதக் கடத்தல் தொடர்பில், இதுவரை 486 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் 0112 441 146 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக இந்த விடயம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.