சாந்தனின் இறுதிக் கிரியைகள் நாளை(04)

by Staff Writer 03-03-2024 | 5:26 PM

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த சாந்தனின் இறுதிக் கிரியைகள் நாளை(04) இடம்பெறவுள்ளன.

அன்னாரின் பூதவுடல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து நேற்று(02) எடுத்துவரப்பட்டு இன்று பல பகுதிகளிலும் பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை ராஜிவ் காந்தி வைத்தியசாலையில் காலமான சாந்தனின் பூதவுடல் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நேற்று முன்தினம்(01) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் பூதவுடல் இன்று காலை வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.

ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட சாந்தனின் பூதவுடலுக்கு முல்லைத்தீவு - மாங்குளம் சந்திப் பகுதியிலும் கிளிநொச்சி டிப்போ சந்தியிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பூதவுடலை தாங்கிய ஊர்தி, கொடிகாமம் - நெல்லியடி வீதி உடுப்பிட்டி ஊடாக தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்னாரின் இல்லத்திற்கு பூதவுடல் கொண்டுசெல்லப்பட்டு நாளை(04) இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன் எள்ளங்குளம் இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த சாந்தன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

கொலை வழக்குடன் தொடர்புடைய 7 குற்றவாளிகளும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் , பேரறிவாளன் முதலில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

இதனையடுத்து சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் நளினி, ரவிச்சந்திரனை தவிர, முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கல்லீரல் செயலிழப்பால் அவதியுற்ற சாந்தன், கடந்த 28 ஆம் திகதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.