மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் மனித சங்கிலிப் போராட்டம்; விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சர்ச்சைக் கருத்து

by Bella Dalima 27-02-2024 | 8:11 PM

Colombo (News 1st) இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பாம்பன் பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

பாரத பிரதமர் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் நடவடிக்கையினை தடுக்க மறுக்கும் இந்திய மத்திய அரசினை கண்டிப்பதாக தெரிவித்து, பாம்பன் பகுதியில் மனித சங்கிலிப்  போராட்டம் இன்று இடம்பெற்றது.

அகில இந்திய மீனவர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மனித சங்கிலிப் போராட்டம்  தமிழகத்தின் இராமேஸ்வரம் - பாம்பனில் இன்று இடம்பெற்றது. 

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு ஆட்சேபனை தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்ததுடன், உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், சமூகவலைத்தளத்தில் பகிரப்படுகின்ற இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் எமிரிட்டின் காணொளியொன்று மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காண்பிக்கப்பட்டது.

அதில் அவர், 

''நான் எத்தனை கோடி ரூபா உனக்கு கொடுத்தேனோ, அவ்வளவையும் எனக்கு திருப்பி கொடுத்துவிட்டு, நீ கச்சத்தீவு பக்கம் வரக்கூடாது, மீன் பிடிக்க வரக்கூடாது என்று சொல்லு..... எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்து விடு... என் வரிப்பணத்தை பிச்சை போடுகின்றேன், நீ அதில் வாழ்ந்துகொண்டு என்னை அழிக்க நினைக்கின்றாய். ஒரு இலட்சம் பேர் அகதி முகாமில் உள்ளார்கள். அவர்களுக்கும் என் வரிப்பணத்தில் சோறு போடுகின்றேன்...''

என குறிப்பிட்டுள்ளார். 

இந்த காணொளி தொடர்பில் மன்னாரில் இன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

இந்த ஊடக சந்திப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

''அவர்கள் எல்லை தாண்டி வந்தது குற்றம். GPS கொண்டு வந்துள்ளார்கள். எல்லை தாண்டி வருவது அவர்களுக்கு தெரிந்துள்ளது.  தெரிந்து கொண்டே எமது வளங்களை எடுப்பதற்கு வந்ததற்கு சட்டம் நடவடிக்கை எடுக்கும் போது, அதனை அவர்கள் வேண்டுமென்று பெரிய போராட்டமாகக் காட்டி, இலங்கை அரசு குற்றம் செய்கின்றது, இலங்கை நீதிமன்றம் தங்களுக்கு அநீதி செய்துள்ளது என்ற விடயத்தை முன்வைத்து, கச்சதீவினை புறக்கணித்துள்ளார்கள். கச்சதீவிற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த ஏனைய யாத்திரிகர்கள் தடுத்துள்ளார்கள். இதனை  நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் நாட்டு அரசிற்கும் எங்கள் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்,''

என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் மொஹம்மட் ஆலம் தெரிவித்தார். 

இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியதாக கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு வருடமாக தடைப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்தது.

மீண்டுமொரு பேச்சுவார்த்தையை வழங்குமாறு வௌிவிவகார அமைச்சு ஊடாக இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அதற்கு இந்தியா பதிலளிக்கவில்லை.