ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை வௌியிட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம்

by Bella Dalima 25-06-2024 | 7:25 PM

Colombo (News 1st) தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ஆழமற்ற கடற்பரப்பின்  செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்விற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது.  இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது X பக்கத்தில் copernicus sentinel - 2 என்ற தனது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ஆழமற்ற கடற்பரப்பு பகுதியின்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கப்படும் ஆதாமின் பாலம், ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டதாக The Hindu செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் ஒன்று முதல் 10 மீட்டர் ஆழம் மாத்திரமே கொண்டது.

இங்குள்ள நிலப்பரப்பு பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. ஏராளமான மீன்கள், கடல் பசு, டொல்பின்கள் ஆகியவை ஆழமற்ற குறித்த பகுதியில் செழித்து வளரக்கூடியயதாக உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்  தகவல் வௌியிட்டுள்ளது.