மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

by Bella Dalima 21-09-2023 | 5:11 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமிற்கும் (Anwar bin Ibrahim) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயார்க்கில் நடைபெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது இரு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த பிரதமர் அன்வர் இப்ராஹிம், மலேசியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாதிடுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கும் சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

அத்துடன், வலயத்தின் விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கையை ஆதரவளிப்பதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள IORA மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பார் எனவும் பிரதமர் அன்வர் பின் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

மலேசியாவிற்கு விஜயம் செய்யுமாறு மலேசிய அரசரின் அழைப்பை மலேசிய பிரதமர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததுடன், அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடுத்த வருடம் மலேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.