வறட்சியால் 66,234 ஏக்கர் பயிர்கள் அழிவு

வறட்சியால் சிறுபோகத்தில் 66,234 ஏக்கர் பயிர்கள் அழிவு; 67,408 விவசாயிகள் பாதிப்பு

by Bella Dalima 16-09-2023 | 4:42 PM

Colombo (News 1st) வறட்சி காரணமாக இம்முறை சிறுபோகத்தில் 66,234 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் ஏனைய பயிர்களும் அழிவடைந்துள்ளன. 

இதன் காரணமாக 67,408 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 

இதனிடையே வறட்சி, மழை மற்றும் புழுக்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட காரணிகளால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர்ச்சேதம் குறித்த மதிப்பீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக விவசாய காப்புறுதி சபையின் தலைவர் W.M.M.P.வீரசேகர குறிப்பிட்டார். 

வறட்சியினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

குறித்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், முழுமையான பயிர்ச்சேத மதிப்பீட்டு அறிக்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்படும் என விவசாய காப்புறுதி சபையின் தலைவர் தெரிவித்தார்.