இன்று(08) தொழிற்சங்க நடவடிக்கை

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக இன்று(08) தொழிற்சங்க நடவடிக்கை

by Staff Writer 08-02-2023 | 7:32 AM

Colombo (News 1st) தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(08) எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடிவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(08) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

பிரதான எதிர்ப்பு பேரணி கொழும்பு - ஹைட்பார்க்கில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் குழந்தைகள், மகப்பேறு மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனத்தினரும் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நீர், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(08) கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.