ஜோன்ஸ்டனுக்கு ஒருமாத கடூழிய சிறை

சட்டவிரோத வாகனத்தை பயன்படுத்திய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு ஒருமாத கடூழிய சிறை

by Staff Writer 25-11-2026 | 2:31 PM

Colombo (News 1st) பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட சொகுசு மோட்டார் வாகனமொன்றை போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி உபயோகித்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 05 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருமாத கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

03 குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அபராதம் மற்றும் தண்டனை இன்று(25) விதிக்கப்பட்டன.

பொருளாதார நெருக்கடியால் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில், 2023 டிசம்பர் 05 முதல் 2024 ஒக்டோபர் 04 வரையான காலப்பகுதியில், பாகங்கள் பொருத்தி உருவாக்கப்பட்ட சொகுசு மோட்டார் வாகனமொன்றை போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பயன்படுத்தியதாகக் குற்றஞ்மத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று அவருக்கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. 

அதற்கமைய, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் எழுத்துமூல அனுமதியின்றி பாகங்கள் பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் என்பதை அறிந்திருந்தும் அதனைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் ஒருமாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

எனினும், அந்த சிறைத்தண்டனையை 05 வருடங்களுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 06 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறித்த சொகுசு மோட்டார் வாகனத்தை அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோதமாக இலக்கத் தகட்டை பொருத்தி வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு 25,000 ரூபா அபராதம் விதித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 03 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார்.

பதிவு செய்யப்படாத வாகனமொன்றை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டிற்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.