.webp)

Colombo (News 1st) மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் 25 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது மெட்டா நிறுவன வரலாற்றில் விதிக்கப்பட்ட மிக மிகப்பெரிய அபராதத் தொகையாகும்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, Cambridge Analytica எனும் அரசியல் ஆலோசனை நிறுவனம், கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திரட்டியது.
இந்த விவகாரத்தில் பயனாளர்களின் தரவு பாதுகாப்பு குறித்து மெட்டா நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க்(Mark Zuckerberg) உள்ளிட்ட உயரதிகாரிகள் பொதுமக்களை திட்டமிட்டு ஏமாற்றியதாக நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறி மெட்டா நிறுவனம் சுமார் 4 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமான முறை விதிமீறல்களில் ஈடுபட்டதாக நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது.
ஆண்டின் ஆரம்பத்தில் இன்ஸ்டகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலிகள் சிறுவர்களின் மனநலனை பாதிப்பதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் கீழ் 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
