.webp)
-561137.jpg)
COLOMBO (News 1st) எந்தவொரு கோரிக்கையையும் நிலவும் எல்லைமீறிய வன்முறைகள் மூலம் நியாயப்படுத்த முடியாதென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் நேற்று (18), நேற்று முன்தினம் (17) 500,000இற்கும் அதிகமான பிரான்ஸ் மக்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மெக்ரோன், வன்முறையை தூண்டும் வகையில் நடந்துகொண்ட நபர்களுக்கு எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் வலியுறுத்தினார்.
பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைய கட்டடங்கள், பொது இடங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் தனிநபர் வணிக வளாகங்கள் என்பனவற்றைக் குறிப்பிட்ட சில போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
பிரபலமான சொகுசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்து, முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பொருட்களை கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
வார இறுதியில் மாத்திரம் சுமார் 2400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசை வலியுறுத்தியும் கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரான்சின் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் போராட்டம் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள தங்கள் பள்ளிகளில் போராட்டங்களை தொடங்கினர்.
எவ்வாறாயினும், சில மாணவர்கள் தங்கள் பள்ளிகளை முடக்கிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரியதுடன், அந்தப் போராட்டங்களும் சற்று கலவரமான போக்கைக் கொண்டதாக அமைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் மாணவர்களின் போராட்டங்களை வன்மையாகக் கட்டுப்படுத்திய விதம் சர்வதேச அளவில் கூட விமர்சனத்திற்கு உள்ளானது.
பின்னர் அவற்றுக்கு மக்களின் ஆதரவு கிடைத்ததுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போது அந்தப் போராட்டங்கள் நாடு முழுவதும் விரிவடைந்து, தொழிலாளர் தொழிற்சங்கங்களும் இணைந்துகொண்டுள்ளன.
இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறான மாபெரும் மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ள பின்னணியில், அந்நாட்டின் அடுத்த தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
