ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு பிணை

ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு பிணை.. வௌிநாடு செல்ல தடை

by Nadeeshan Meedin 17-10-2026 | 4:13 PM

COLOMBO (News 1st) ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.

இதற்கமைய, சந்தேநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகளிலும் விடுவித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தார்.

சிரிலிய சவிய அமைப்பினூடாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து, 10 மில்லியன் ரூபா நிதியை தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெற்று இயந்திரத்தை வைத்தியசாலைக்கு வழங்காது, அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு  கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரக முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளூடாக  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய சந்தேகநபரின் சுகாதார நிலைமை தொடர்பான 6 பக்கங்கள் அடங்கிய மருத்துவ அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரின் இதயத்திற்கு குருதி கொண்டு செல்லப்படும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு Bypass அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சந்தேகநபரின் இதயத்தின் இடது பகுதிக்கு குருதி கொண்டு செல்லும் குழாய் அடைபட்டுள்ளதால், Bypass அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர், சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்தார்.

இதன்போது முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். 

இதனையடுத்து பிணை உத்தரவை அறிவித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபரின் தற்போதைய நோய் நிலைமையை விசேட காரணியாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதால், அவரை பிணையில் விடுதலை செய்வதாக தெரிவித்தார். 

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.