களனி கங்கையில் 24 மணி நேர நீர் தரக் கண்காணிப்புச்

களனி கங்கையின் நீரின் தரத்தை 24 மணி நேரமும் அளவிட சென்சர்கள் பொருத்தும் திட்டம்

by Staff Writer 26-08-2026 | 9:29 AM

COLOMBO (News 1st)  களனி கங்கையின் நீரின் தரத்தை அளவிட 24 மணித்தியாலங்களும் இயங்கும் சென்சர்களைப் பொருத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் சுற்றாடல் அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தற்போது அவ்வாறான 2 சென்சர்கள் ஆற்றில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிக சனத்தொகை கொண்ட பிரதேசங்களில் ஆற்றை அண்மித்து பெருமளவான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொழிற்சாலைகள் மற்றும் சனத்தொகை கூடிய பகுதிகளில் இருந்து நீண்ட காலமாகவே களனி கங்கைக்கு கழிவுகள் வெளியேற்றப்படுகின்ற போதிலும் கடந்த சில வருடங்களாக இது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தற்போது நீரின் தூய்மையை அளவிடும் 2 சென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 24 மணி நேரமும் உடனுக்குடன் நீரின் தரத்தை அறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். ஜைக்கா (JICA) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து களனி கங்கை முழுவதும் இவ்வாறான சென்சர்களைப் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சுற்றாடல் சட்டத்திற்கமைய நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்களுக்குக் கழிவுநீரை வெளியேற்றுதல் போன்ற சுற்றாடல் மாசடைவை எவரேனும் ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி வலியுறுத்தியுள்ளார்.