இராணுவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய இந்தியா

இராணுவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய இந்தியா

by Staff Writer 19-06-2026 | 7:42 PM

Colombo (News 1st) இந்திய அரசாங்கம் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கிலேயே இவை வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய இராணுவத்தின் செயற்பாட்டு கையிருப்பிலிருந்து இந்த இராணுவ உபகரணங்களை வழங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை இராணுவம் எதிர்கொண்டிருந்த உபகரண பற்றாக்குறைக்கு தீர்வாக ஒரு மாதம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இந்த அவசரத் தேவையை இந்தியா பூர்த்தி செய்துள்ளது.

குறித்த இராணுவ உபகரணங்கள் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘சார்தா’ கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

இந்த இராணுவத் தளவாடங்களைக் கையளிக்கும் நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளில் மாத்திரம் இலங்கை ஆயுதப் படைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயிற்சி உதவிகளை வழங்கவும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு 5 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்மையில் பாதிப்பை ஏற்படுத்திய டித்வா புயலின் போது இந்திய இராணுவம் இந்த நாட்டின் சுமார் 7000க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒத்துழைப்பு வழங்கி 7 பாலங்களை நிர்மாணித்துக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.  

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வருடாந்தம் இலங்கை ஆயுதப் படை உறுப்பினர்கள் 1200 பேர் வரை இந்தியாவில் விசேட பயிற்சியைப் பெறுகின்றனர்.

இந்த இராணுவ உபகரணங்களை வழங்கியமையானது இந்தியாவின் 'அயலவருக்கு முதலிடம்' எனும் கொள்கையையும் பிராந்தியத்திலுள்​ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்